தவெக நிர்வாகிகளின் தொடர் குற்றச்செயல்களுக்கு முதல்வர் நடவடிக்கை என்ன? – அப்பாவு கேள்வி
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவதாக முன்னாள் சப
Appavu


Hh


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இரு தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும், சென்னை காசிமேடு, பூந்தமல்லி, சேலம், ஆலந்தூர், மதுரை, சேத்துப்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திருச்செந்தூரில் மோசடி மற்றும் வழிப்பறி, தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை, சேலம் சங்ககிரி அருகே கஞ்சா கடத்தல், வேலூரில் மிரட்டல், மூதாட்டியிடம் வழிப்பறி, புதுக்கோட்டையில் பல கோடி ரூபாய் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலும் தவெக நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.

“தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தமிழக பெண்களுக்கு நீங்கள் வழங்கும் பாதுகாப்பு இதுதானா? தூய ஆட்சி நடத்துகிறீர்களா?” என முதல்வரை நோக்கி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் கட்சியினரை கண்டித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதாகவும், திரையில் ஹீரோவாகவும் ஆட்சியில் ஜீரோவாகவும் இருப்பது வெட்கமாக இல்லையா என்றும் அப்பாவு எக்ஸ் வலைதளத்தில் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ