Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம்-2026 தொடர்பாக The New Indian Express நாளிதழ் வெளியிட்ட செய்தியில் திமுக சட்டத்தை எதிர்க்கவில்லை என தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக, திமுக சட்டத்துறை இணைச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இ.பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் விஜய் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியதாக ‘Sources’ அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அரசின் அதிகாரப்பூர்வ கடிதம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், திமுக இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருப்பது முற்றிலும் தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆகஸ்ட் 12ஆம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தச் சட்டத் திருத்தம் நிதிக் கூட்டாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என கண்டித்ததாகவும், ஆகஸ்ட் 13ஆம் தேதி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, இது மாநில உரிமைகள் மற்றும் மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் மசோதா என எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு எதிராக பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி கனிமொழி கருணாநிதி, இந்தச் சட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் ஏன் அமைதி காக்கிறார் என கேள்வி எழுப்பிய பின்னரே, தவெக சார்பில் முதல்வர் விஜய் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானதாகவும் பரந்தாமன் கூறியுள்ளார்.
இதனால், நாடாளுமன்றத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும் திமுக தொடர்ந்து சட்டத் திருத்தத்தை எதிர்த்து வந்த நிலையில், திமுக எதிர்க்கவில்லை என்ற வகையில் செய்தி வெளியிடப்பட்டதன் பின்னணி என்ன என்றும், இதற்கான அழுத்தம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் உண்மையான நிலைப்பாட்டை பதிவு செய்வதே ஊடக அறம் என்றும், தவறான தகவலுடன் வெளியிடப்பட்ட செய்திக்கு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் இ.பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P