தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக் கோரி இருவரது தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள
உயர்நீதிமன்றம்


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக் கோரி இருவரது தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் தொகுதி வாக்காளர் ஆர்.சிவராஜ் ஆகியோர் தேர்தல் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளிலும் ஆதவ் அர்ஜுனா தரப்பினர் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதியை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்பு கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில், மீண்டும் அவகாசம் வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் நிராகரிப்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி இரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவற்றின் சட்டபூர்வ நிலை மற்றும் எதிர் தரப்பினரின் வாதங்கள் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P