கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையில் விவசாயிகள் திடீர் போராட்டம்
கோவை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை கோவை மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தினமும் ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், உழவர் சந்தைக
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையை சூழ்ந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகள் - விவசாயிகள் திடீர் போராட்டம்


கோவை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை கோவை மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தினமும் ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உழவர் சந்தைக்கு செல்லும் பிரதான சாலை மற்றும் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் வியாபாரிகள் சிலர் முறையான அனுமதி இன்றி தற்காலிக கடைகள் மற்றும் ஷெட்டுகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் சந்தைக்குள் காய்கறிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் சந்தைக்கு வந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தோட்டக்கலைத் துறை மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிங்காநல்லூர் உழவர் சந்தை விவசாயிகள் இன்று காலை வழக்கமான விற்பனையை புறக்கணித்து சந்தை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இன்று காலை உழவர் சந்தையில் விற்பனை முற்றிலும் நடைபெறவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளாண்மை இணை இயக்குனர் ஷீலா மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் சிங்காநல்லூர் உழவர் சந்தை தொடர்பான கோரிக்கை மனுவை விவசாயிகள் வேளாண்மை துணை இயக்குனர் ஷீலாவிடம் வழங்கினர். உடன் வேளாண் துறை அதிகாரி பிரவீனா பெற்றுக் கொண்டார்

இதனை தொடர்ந்து உழவர் சந்தையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து, விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதிகாரிகளின் இந்த உறுதிமொழியை ஏற்று விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

இதனையடுத்து உழவர் சந்தையில் மீண்டும் விற்பனை தொடங்கியது.

Hindusthan Samachar / vidya.b