இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று சென்னை வருகை
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (ஆகஸ்ட் 27) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 4-க்கு அவர் வருகை தர
Gyanesh Kumar


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (ஆகஸ்ட் 27) சென்னை வருகிறார்.

டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 4-க்கு அவர் வருகை தர உள்ளார்.

இன்று நடைபெறும் மண்டல மாநாட்டில் பங்கேற்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வருகை தந்து, மாணவர்களிடையே உரையாற்றி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (27ம் தேதி) சென்னைக்கு வருகை தந்து, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள ‘தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் மற்றும் ECINET’ குறித்த மண்டல மாநாட்டிற்கு தலைமை வகித்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் நேரடி கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஒருங்கிணைந்து ‘ஜனநாயகத்தை கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த முன்னெடுப்பானது, வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்துதல், வருங்கால வாக்காளர்களிடையே அரசியலமைப்பு விழிப்புணர்வை வளர்த்தல் மற்றும் தேர்தல் பணிகளுக்கு டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

இன்று முழுவதும் நடைபெறும் இந்நிகழ்வில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் மற்றும் தலைமை இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்) சீமா கண்ணா உள்ளிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் என சுமார் 1,000 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

மேலும் துணை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் துறைசார் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

இன்று காலை அமர்வில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சுமார் 500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடி, கள அளவிலான வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் களப்பணி சார்ந்த கருத்துக்களை கேட்டறிவார்.

மதியம், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஜனநாயக பங்களிப்பு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றி, அதைத் தொடர்ந்து நடைபெறும் கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்பார்.

மேலும், இந்த மாநாட்டில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளின் நேரடி செயல்விளக்கங்கள், கலந்துரையாடல் கண்காட்சி பலகைகள், தேர்தல் வினாடி வினாக்கள் மற்றும் ELC 2.0, ஒருங்கிணைந்த ECINET செயலி போன்ற தொழில்நுட்பத் தளங்களின் பயன்பாடுகளும் இடம்பெறும்.

Hindusthan Samachar / ANANDHAN