Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
திபெத்தில் பனிப்பாறை உருகி ஏற்பட்ட உடைப்பால், நேபாளத்தின் கோஷி மற்றும் போட்டேகோஷி ஆற்றுப் பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோஷி, போடேகோஷி ஆற்றுப் படுகைகளில் உள்ள கிராமங்கள், பாலங்கள் மற்றும் முக்கியச் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல மலைக் கிராமங்கள் வெளி உலகத்துடனான தொடர்பை இழந்துள்ளன.
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ள பாதிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அத்தியாவசியப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய முதல் தொகுதி நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானம் நேற்று நேபாளம் சென்றடைந்தது. வெள்ளத்தால் தவிக்கும் மக்களின் உடனடி தேவைகளை கருத்தில் கொண்டு இந்த உதவி அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கூடுதல் நிவாரணப் பொருட்களுடன் இந்தியா அனுப்பும் இரண்டாவது விமானம் இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் செல்ல உள்ளது. அண்டை நாடான நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்க இந்தியா தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதும் தற்காலிகக் கூடாரங்கள், போர்வைகள், தூய்மையான குடிநீர் விநியோகக் கருவிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய அடுத்தடுத்த தொகுப்புகள் நேபாளத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கியுள்ள 100-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளைக் கண்டறியும் பணியில் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், நேபாள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b