தமிழ்நாட்டின் நலனுக்கே மேகதாது அணை - முதல்வர் டி.கே.சிவக்குமார்
பெங்களூரு , 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தின் நலன் மற்றும் பெங்களூருவின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டே மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர
A


பெங்களூரு , 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தின் நலன் மற்றும் பெங்களூருவின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டே மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவமும், குரலும் பாதிக்கப்படும். எனவே, தொகுதி மறுவரையறையை நாங்கள் எதிர்க்கிறோம்.

தமிழகத்தின் நலன் மற்றும் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காகவே மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளோம். மேகதாதுவில் சேமிக்கப்படும் தண்ணீரில் 95 சதவீதம் தமிழகத்துக்குத்தான் பயன்படும். இதன் மூலம் தமிழகத்துக்கே நன்மை ஏற்படும் என்பதை தமிழக முதல்-அமைச்சர் விஜயிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்கப்படும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து நடக்கும்.

இளைஞர்களை விளையாட்டு, கலாசாரம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் 10 ஆயிரம் ‘பாரத் ஜோடோ’ குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

அதேபோல், எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்காக குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை வழங்கி வருகிறோம்.

2028-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA