Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
சின்னப்பிள்ளை அவர்களின் வரலாறு மற்றும் வாஜ்பாய் அவர்களின் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் கீர்த்தனா அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,
மதுரையைச் சேர்ந்த அன்னை சின்னப்பிள்ளை அவர்கள், ‘களஞ்சியம்’ சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். இவரது உன்னதப் பணியைப் பாராட்டி, அன்றைய பாரதப் பிரதமர், பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், கடந்த 2001-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ‘ஸ்த்ரீ சக்தி’ விருது வழங்கும் மேடையில், அன்னை சின்னப்பிள்ளை அவர்களின் காலில் விழுந்து வணங்கிக் கௌரவித்தார். இது இந்தியாவே வியந்த ஒரு பண்பாட்டுத் தருணம்.
ஆனால், நேற்று சட்டமன்றத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் செல்வி கீர்த்தனா அவர்கள், அன்னை சின்னப்பிள்ளை அவர்கள் ஹைட்ராலிக் அமைப்பில் (Hydraulic System) ஆயில் கசியாமல் இருக்க ‘O-Ring’ கண்டுபிடித்தார் என்றும், அதற்காக முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள், அன்னை சின்னப்பிள்ளை அவர்களின் வீட்டிற்கே சென்று காலில் விழுந்தார் என்றும் ஒரு கற்பனைக் கதையைக் கூறியுள்ளார்.
திரு. வாஜ்பாய் அவர்கள் மற்றும் அன்னை சின்னப்பிள்ளை ஆகியோர் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் நகைப்பிற்குரியவை மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியது. இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் ஒரு தவறான தகவலைப் பதிவு செய்துவிட்டு, அது சமூக வலைதளங்களில் அம்பலமானவுடன், “நேரம் கருதி சுருக்கமாகச் சொன்னேன்” என்று அமைச்சர் செல்வி. கீர்த்தனா அவர்கள் இன்று அளித்துள்ள விளக்கம், “முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும்” முயற்சியாகும்.
எனவே, அன்னை சின்னப்பிள்ளை அவர்களின் வரலாறு மற்றும் திரு. வாஜ்பாய் அவர்களின் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் செல்வி. கீர்த்தனா அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும். இனி இதுபோல் ஆதாரமற்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam