தமிழகத்திற்கான ரூ.5,109 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் – மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி ₹5,109 கோடியை மத்திய பாஜக அரசு கடந்த 3 ஆண்டுகளாக விடுவிக்காமல் தடுத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக
மாணிக்கம் தாகூர்


தமிழ்நாடு, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி ₹5,109 கோடியை மத்திய பாஜக அரசு கடந்த 3 ஆண்டுகளாக விடுவிக்காமல் தடுத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது.

தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ₹5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ₹1,788 கோடி, 2025-26 இல் ₹1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ₹1,825 கோடி என மொத்தம் ₹5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் RTE திட்டத்திற்கு ₹714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது.

மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ₹2,014 கோடியையும், நடப்பாண்டில் ₹647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது.

ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின்றன.

மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, PM-SHRI மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?

இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும்.

எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ₹5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam