Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
இன்றைய தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
அப்போது நிர்வாக வசதிக்காக மாவட்டங்களில் புதிய வட்டங்கள் மற்றும் வருவாய் கோட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும், இது தொடர்பாக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிதியாண்டு பணிகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு வட்டங்கள் மற்றும் கோட்டங்களை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இதனிடையே சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சிகளை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. சரவணன் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார். நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதி மக்களுக்கு மாநகராட்சியின் அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க இந்த இணைப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், சோழிங்கநல்லூர் ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல் மொடக்குறிச்சி தொகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலம் எனக் காரணம் காட்டி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க மறுக்கப்படுவதாக மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சண்முகம் குற்றம் சாட்டினார். நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு விளக்கமளித்த அமைச்சர், குறிப்பிட்ட இடம் உண்மையில் நீர் ஓடக்கூடிய பகுதியாக இல்லாத பட்சத்தில், அது குறித்து நேரில் ஆய்வு செய்து பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b