ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு புதிய நலத்திட்டங்கள் – அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூகநீதித் துறை சார்பில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, வாழ்வாதாரம், வீட்டு வசதி மற்றும் சமூக மேம்பாட்டை மையமாகக்
வன்னியரசு


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூகநீதித் துறை சார்பில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, வாழ்வாதாரம், வீட்டு வசதி மற்றும் சமூக மேம்பாட்டை மையமாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும். ஆதிதிராவிட மக்கள் சமுதாய நிகழ்வுகளை நடத்துவதற்காக 100 சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்கும் வகையில் ‘அகம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2,500 கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.160 கோடி செலவில் 150 சமூக நீதி விடுதிகள் அமைக்கப்படும். விடுதி மாணவர்களுக்கு தரமான, சத்தான உணவு வழங்கும் வகையில் மாதாந்திர உணவுக் கட்டணமும் உயர்த்தப்படும்.

ஆதிதிராவிட குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘விடிவெள்ளி மகளிர் வாழ்வாதாரத் திட்டமும்’, வீடற்ற ஆதிதிராவிட குடும்பங்களுக்கு ‘இனிய இல்லம்’ திட்டமும் செயல்படுத்தப்படும்.

விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்விக்கு ஏற்ற சூழலை உறுதி செய்ய ‘அரண்’ விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் வணிக மையமும், பழங்குடியினரின் பண்பாடு மற்றும் ஆய்வுப் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையமும் அமைக்கப்படும்.

பழங்குடியின மாணவர்களின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியை ஊக்குவிக்க சிறப்பு கல்வி உதவித்தொகைத் திட்டமும், மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் படிப்பகங்களும் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam