முள்ளினார்கள், கில்லினார்கள் என சொந்த விஷயங்களை பேசும் இடமாக சட்டப்பேரவை மாறிவிட்டது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாங்குளி கிராமத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். வெள்ளாங்குளி போன்ற சிறிய கிராமத்
Nainar Nagenthran Byte


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாங்குளி கிராமத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

வெள்ளாங்குளி போன்ற சிறிய கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், அருகிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இதுபோன்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியில் வாய்ப்பு பெறுவதற்கு நீட் தேர்வு உதவியாக இருப்பதாகவும் கூறினார்.

“தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து கூறுகிறார்கள். ஆனால், ஏன் வேண்டாம் என்பதற்கான காரணத்தை எந்தத் தலைவரும் தெளிவாகக் கூறுவதில்லை” என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

மேலும், சட்டப்பேரவை விவாதங்கள் குறித்துப் பேசிய அவர், கடந்த காலங்களில் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்த சட்டப்பேரவையின் தரம் தற்போது மாறிவிட்டதாக விமர்சித்தார்.

“மாமாவிடம் கேளுங்கள், அப்பாவிடம் கேளுங்கள், முள்ளினார்கள், கில்லினார்கள், அடித்தார்கள் என்று சொந்த விஷயங்களைப் பேசும் இடமாக சட்டப்பேரவை மாறிவிட்டது” என்று அவர் குற்றம்சாட்டினார்.

பொதுக்கூட்ட மேடைகளில் பேசப்படும் தனிப்பட்ட விஷயங்களையும், பத்திரிகைகளில் வெளியாகும் தகவல்களையும் சட்டப்பேரவையில் விவாதிப்பது முறையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

லஞ்சம் கொடுத்ததாக ஒருவர் கூறினால், லஞ்சம் வாங்கியவர் யார் என்பதையும் விசாரித்து, லஞ்சம் கொடுத்தவர் மற்றும் வாங்கியவர் என இருதரப்பினர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

சமூக வலைதளங்களில் தனது பேச்சுகள் திரித்து வெளியிடப்படுவதாகக் கூறிய அவர், தாம் கூறிய கருத்துகளை வேறு விதமாக சித்தரித்து பிரசாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி தொடர்பாக பேசிய நயினார் நாகேந்திரன், “மோடி அம்பாசமுத்திரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை; இந்தியாவே இன்று மோடிக்குத்தான் சொந்தம், உலகமே மோடிக்குத்தான் சொந்தம்” என்று தெரிவித்தார்.

மேலும், “கட்சி தாவல், குதிரை பேரம் எல்லாம் தவெக ஆட்சியில்தான் நடைபெறுகிறது. குதிரை பேரத்தை மதிப்பிற்குரிய செங்கோட்டை நடத்துகிறாரா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Hindusthan Samachar / P YUVARAJ