Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அறம் வளர்தீஷ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மீனாட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியை சேர்ந்த சந்திரன், மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்த அருள் செல்வம் மனைவி பானுமதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோபால், மனைவி சரஸ்வதி உட்பட 49 பேர் நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இவர்கள், சென்னை, குரோம்பேட்டை பகுதியில் உள்ள ‘மகாதேவ் கைலாஷ் சுற்றுலா ஏஜென்சி’ மூலம் கடந்த 13ஆம் தேதி அன்று 15 நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளம் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு சம்பவத்திற்கு பிறகு 6 பேர் தொடர்பு கொள்ளமுடியவில்லை என உறவினர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சினேகாவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த மீனாட்சி, சந்திரன், அருணாச்சலம், லதா பானுமதி, சரஸ்வதி, கோபால் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மனு அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, நேற்று காலை தங்களது உறவினர்களை தொடர்பு கொண்ட மீனாட்சி மற்றும் சந்திரன் ஆகியோர் தாங்கள் நேபாளத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் குறித்து தகவல் அளிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நேற்று வரை தமிழ்நாடு அரசும், இந்திய தூதரகமும் கும்பகோணத்தில் உள்ள சுற்றுலா ஏஜென்சி மூலம் நேபாளம் சென்ற 57 பேரை காணவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள சுற்றுலா ஏஜென்சி மூலம் நேபாளம் சென்ற 49 பேரரையும் காணவில்லை என தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு நேபாள வெள்ளப் பெருக்கில் காணாமல் போனவர்கள் குறித்து வெளியிட்டுள்ள பட்டியலில், காஞ்சிபுரம் சுற்றுலா பயணிகள் பெயர் இல்லாததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி சுற்றுலாவுக்கு சென்று இன்று சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் அச்சத்தில் இருப்பதாக வேதனை அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN