Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 700-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், துயரில் பங்கெடுப்பதாக கூறியுள்ளார். திடீரென பெருக்கெடுத்த ஆற்று வெள்ளம் வீடுகள் மற்றும் கட்டுமானங்களை மூழ்கடித்த காட்சிகள் நெஞ்சை பதறச் செய்வதாகவும், எவ்வளவு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டாலும் இயற்கையின் முன் மனிதன் சிறியவன் என்பதை இதுபோன்ற பேரிடர்கள் உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், புவிவெப்பமயமாதல், காலநிலை மாற்றம், திபெத் நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து இயற்கை ஆய்வாளர்கள் கூறுவதாக குறிப்பிட்டுள்ள சீமான், இயற்கைக்கு எதிரான மனித நடவடிக்கைகள் இறுதியில் மனித இனத்துக்கே பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
“மலையும், மரமும், மணலும், மழையும், ஆறும், அருவியும், காடும், கடலும் நன்றாக இருந்தால்தான் மனித இனம் நன்றாக இருக்க முடியும்” எனக் குறிப்பிட்ட அவர், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வர தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்த அனைவருக்கும் கண்ணீர் வணக்கம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam