Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாதிப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கான மானிய கோரிக்கை நடைபெற்றது.
அப்போது சட்டமன்றத்தில் பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், “உங்கள் சண்டையை பார்ப்பதற்காக நாங்கள் சட்டமன்றத்துக்கு வரவில்லை. இது சட்டமன்றமே தவிர, சண்டை மன்றம் கிடையாது.
மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்களைத் தவிர மற்ற அனைத்தும் நடைபெறுகின்றன. ஆளுங்கட்சியையும், எதிர்க்கட்சியையும் சேர்த்தே இதைச் சொல்கிறேன்” என்றார்.
மேலும், இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் சட்டமன்றக் கூட்டத்தொடர் மாலை 6 மணி வரை நீடிப்பதாகவும், இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் கூட தேர்வுக்கு இந்த அளவுக்கு தயாராக மாட்டார்கள்,ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவு பகலாக தயாராகி வருகின்றனர் என்றும் பிரேமலதா ஆவேசமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P