Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
புகழ்பெற்ற ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் 'கேல் கி பாத், பிஎம் கே சாத்' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக.27) நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.
இந்த உரையாடல் நிகழ்வு ஆகஸ்ட் 27 முதல் 29 வரை 1400-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளதாகவும், இதில் ஐஐடிக்கள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய அளவிலான கலந்துரையாடலில் தமிழகத்தின் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்வில் மாணவர்கள் பிரதமரிடம் தங்கள் கருத்துக்களையும், விளையாட்டுத் துறை குறித்த கேள்விகளையும் நேரடியாக எழுப்ப உள்ளனர்.
அடிமட்ட அளவில் விளையாட்டை ஊக்குவித்தல், 2036 ஒலிம்பிக் போட்டிக்கான திறமைகளை வளர்த்தல் மற்றும் ஆளுமை மற்றும் தலைமைத்துவத்தில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்த முயற்சி விளையாட்டு வீரர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையிலான உரையாடலை மேம்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b