Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (62), அவரது மனைவி அருள்மணி (57) ஆகியோர் ஆன்மிகப் பயணமாக கடந்த 14ஆம் தேதி கைலாயம் சென்றுள்ளனர்.
கைலாய யாத்திரையை முடித்துவிட்டு நேபாளம் வழியாக திரும்பிய நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழை காரணமாக இருவரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பழனிவேல் மற்றும் அருள்மணியின் தற்போதைய நிலை குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவர்களது உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும், பழனிவேல், நாமக்கல் மாவட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 9 பேர் ஆன்மிகப் பயணமாக சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பழனிவேல், அருள்மணி உள்ளிட்ட 9 பேரின் நிலை குறித்தும் அதிகாரிகள் உரிய தகவல்களை திரட்டி, அவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam