Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் நிலவும் கடுமையான மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறை குறித்து அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பினார். கோவை மண்டலத்தின் முக்கிய அரசு மருத்துவமனையாக விளங்கும் இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையின் தேவையை அரசு நன்கு அறிந்துள்ளதாகவும், அங்கு நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் போதிய பணியாளர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதேபோல், திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லாதது குறித்து அதிமுக எம்எல்ஏ கோ. ஹரி கேள்வி எழுப்பினார். ஏழை எளிய நோயாளிகள் ஸ்கேன் எடுப்பதற்காக தனியார் மையங்களையோ அல்லது தொலைதூர மருத்துவமனைகளையோ நாட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செயல்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், திருத்தணி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் பயனாளிகளின் தேவையை கணக்கில் கொண்டு, அங்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b