சுஸ்லான் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறவில்லை – அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுஸ்லான் நிறுவனம் தனது முதலீடுகளை முழுமையாக ஆந்திராவுக்கு மாற்றிவிட்டதாக பரவி வரும் வதந்திகளுக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 111-ன்
அமைச்சர் கீர்த்தனா


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுஸ்லான் நிறுவனம் தனது முதலீடுகளை முழுமையாக ஆந்திராவுக்கு மாற்றிவிட்டதாக பரவி வரும் வதந்திகளுக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 111-ன் கீழ் திருத்த அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், சுஸ்லான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், தொழில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவே ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் சுஸ்லான் நிறுவனம் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் திட்டங்களை தொடங்க உள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 500 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு நிறுவனம் தனது தொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில் அண்டை மாநிலங்களிலும் முதலீடு செய்வது இயல்பான வர்த்தக நடைமுறை என குறிப்பிட்ட அமைச்சர், ஆந்திராவில் சுஸ்லான் மேற்கொண்டுள்ள முதலீடுகளை தமிழகத்தை விட்டு நிறுவனம் வெளியேறுவதாக தவறாக சித்தரித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் சுஸ்லான் நிறுவனத்தின் தொழிற்பணிகள் தொடர்ந்து தடையின்றி நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, மதுரை மாவட்டத்தில் சின்னப்பிள்ளை சுயஉதவிக் குழு மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக தான் பேசிய கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு செய்திகளில் வெளியானதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

அந்தப் பகுதிகள் சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து முறைப்படி திருத்தப்பட்டு சரியான வடிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam