Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை வாங்கும் வசதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு தாக்கல் செய்த மனுவில்,
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆன்லைன் மூலம் மதுபானங்களை வாங்கும் வசதியை தொடங்கி வைத்து பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் மது வாங்கும்போது 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது என்று டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பெரியவர்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரியை பயன்படுத்தி சிறுவர்களும் மதுபானங்களை வாங்கும் வாய்ப்பு உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக முதியோர் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் நிலை உள்ளது.
ஆனால், மதுபானம் வாங்குபவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சமூக பாதிப்பு ஏற்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, ஆன்லைன் மதுவிற்பனை தொடர்பான அரசின் அறிவிப்பு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும், மதுவிற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியுள்ளதாகவும் வாதிட்டார்.
மேலும், தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் விசாரணை வரம்பில் மதுவிற்பனை மூலம் அரசின் வருவாயை அதிகரிப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதும் இடம்பெற்றுள்ளதாகவும், ஆன்லைன் மதுவிற்பனைக்கு முறையான வயது வரம்பு நிர்ணயிக்கப்படாததால் இளைஞர்கள் எளிதில் மதுவை வாங்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA