சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் விருப்பம் - திருமாவளவன்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) சமூக நீதித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சென்னை எம்
Thirumavalavan


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

சமூக நீதித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன்,

'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்' என்கின்ற கொள்கை முழக்கத்தோடு 1999 நாடாளுமன்ற பொது தேர்தலின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்தது.

கால் நூற்றாண்டு காலம் மேற்கொண்ட கடும் பயணத்தின் விளைவாக இன்று ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க கூடிய அரிய வாய்ப்பை தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு அளித்திருக்கிறார்கள்.

கூட்டணி அரசு தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்பதை உரக்கப் பேசி வந்த வி.சி.க. இன்றைக்கு அந்த இடத்தை எட்டி இருக்கிறது. முதலமைச்சர் விஜய் கூட்டணி அரசு அமைவதாக தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்தார்.

அதன்படி இன்றைக்கு அமைச்சரவையில் வி.சி.க. அங்கம் வகிக்கின்ற வாய்ப்பை அவர் வழங்கி இருக்கிறார். சமூக நீதித்துறை அமைச்சராக வி.சி.க.வின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு பொறுப்பேற்று இன்றைக்கு முதன்முதலாக சமூக நீதித்துறைக்கான கொள்கை முழக்க அறிவிப்பை செய்கிறார்.

இதன் மூலம், விளிம்பு நிலை மக்களின் கனவை நனவாக்கும் ஒரு வாய்ப்பை அமைச்சர் வன்னி அரசு பெற்று இருக்கிறார். அந்த வகையில் இந்த நாள் இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நாளாக அமைந்திருக்கிறது. இந்த வாய்ப்பு தமிழ்நாடு மக்கள் அளித்துள்ள வாய்ப்பு. முதலமைச்சர் விஜய் அளித்துள்ள வாய்ப்பு.

ஆகவே மக்களுக்கும் முதலமைச்சருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான கேள்விக்கு,

சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய்யின் எதிர்பார்ப்பு. அண்மையில் அவரை சந்தித்தபோது, சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அமைச்சராக வன்னி அரசு செயல்பாடு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். அதில் பெரும்பான்மையாக அமைச்சர் வன்னி அரசை பாராட்டி பலரும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அவருடைய பணிகள் பலராலும் இன்றைக்கு வரவேற்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்து 100 நாட்களை முடித்து இருக்கின்ற நிலையில், எஞ்சியுள்ள ஆண்டுகளில் குறைகளை கண்டறிந்து களைவதற்குரிய முயற்சிகளை இந்த தமிழ்நாடு அரசும் மேற்கொள்ளும். குறிப்பாக அமைச்சர் வன்னி அரசும் மேற்கொள்வார். பொதுமக்களுடைய கோரிக்கை என்னவோ அந்த கோரிக்கையை நிறைவேற்றுவது தான் இந்த அரசின் நோக்கம் என்று முதலமைச்சர் விஜய் சொல்லி இருக்கிறார்.

புதிதாக விமான நிலையம் அமைப்பதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்ற தகவலையும் முதலைச்சர் விஜய் சொல்லி இருக்கிறார்.

ஆகவே, பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன் என்று திருமாவளவன் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN