வாடிப்பட்டியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரி – தாசில்தார் வாகனத்தை நிறுத்த முயன்றபோது தப்பியோட்டம்
மதுரை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, அதனை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தாமல் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கடத்துவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் சென்றது.
லாரி


மதுரை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டம்

வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, அதனை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தாமல் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கடத்துவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் சென்றது.

இதையடுத்து இன்று காலை அவர் தலைமையில் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கட்சைகட்டி பகுதியில் செயல்படும் குவாரியிலிருந்து TN-65 AR 9048 என்ற பதிவு எண் கொண்ட டிப்பர் லாரியில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வருவது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியபோதும், ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டிச் சென்று தப்பிக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து, தாசில்தார் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஜீப்பில் லாரியை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர்.

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் லாரியை நிறுத்திய ஓட்டுநர், டிப்பரில் இருந்த மண்ணை சாலையோரத்தில் கொட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும், லாரியில் இருந்து இறங்கிய ஓட்டுநர் தாசில்தாரிடம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அவரை விட்டுவிடுமாறு கூறியதாகவும் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாடிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அனுமதியின்றி மண் கடத்திய லாரியை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் விரட்டிப் பிடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam