வக்ஃப் வாரியத்திற்கு புதிய கட்டடம், இஸ்லாமிய மாணவிகளுக்கு உதவித்தொகை - அமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (ஆக.27), நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் நலத
Shajahan


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (ஆக.27), நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது அமைச்சர் ஷாஜகான் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் நலத்துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:

சிறுபான்மையினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆண்டுக்கு 2,500 பேர் வீதம் மொத்தம் 10,000 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9, 10- ஆம் வகுப்பு பயிலும் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.8.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மாணவிகள் இளங்கலை உயர்கல்வியைத் தொடரும் வகையில், அரசு நிர்ணயிக்கும் கட்டணத் தொகையை அரசே வழங்கும் திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 10 மாவட்டங்களில் ரூபாய் 4.45 கோடி செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் மாவட்ட கள ஆய்வுகளுக்கான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொன்மையான தேவாலயங்களை பழமை மாறாமல் பழுது பார்த்து சீரமைப்பதற்காக நடப்பாண்டில் ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும்.

முஸ்லிம் வக்ஃப் மற்றும் கிறித்துவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வட்டியில்லாக் கடன் வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்திற்கு ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலம் சென்னையில் சிறுபான்மையினர் மகளிர் கல்லூரி புதிதாக தொடங்கப்படும்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூபாய் 5 கோடியாக உயர்த்தப்படும்.

Hindusthan Samachar / ANANDHAN