கேரட் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி?
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற சமவெளிப் பகுதிகளிலும் கேரட் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கேரட்டில் அதிக மகசூல் பெற, முறையான நிலத்தேர்வு, தரமான விதைகள்
high yield in carrot cultivation


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற சமவெளிப் பகுதிகளிலும் கேரட் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

கேரட்டில் அதிக மகசூல் பெற, முறையான நிலத்தேர்வு, தரமான விதைகள், சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவை மிக அவசியமாகும்.

செம்மண் அல்லது மணல் கலந்த வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணின் pH அளவு 5.5 முதல் 7.0 வரை இருக்க வேண்டும். சமவெளிப் பகுதியில் அக்டோபர் - நவம்பர் மாதங்களிலும், மலைப் பகுதியில் மார்ச் - ஜூலை மாதங்களிலும் பயிரிடலாம்.

நிலத்தை 3-4 முறை நன்றாக உழுது, கட்டிகள் இல்லாமல் தூளாக்க வேண்டும். பிறகு 30 செ.மீ இடைவெளியில் பாத்திகள் அல்லது வரப்புகள் அமைக்க வேண்டும்.

ஊட்டி-1, பூசா கேசர் மற்றும் வணிகரீதியான உயர் விளைச்சல் தரும் கலப்பின ரகங்களை தேர்வு செய்வது அதிக மகசூலுக்கு வழிவகுக்கும்.

ஒரு ஏக்கருக்கு சுமார் 1.5 முதல் 2 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளை விதைப்பதற்கு முன் ட்ரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் வேர் அழுகல் நோயைத் தடுக்கலாம்.

அடித்தள உரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட வேண்டும். மண்ணின் தரத்திற்கேற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை சரியான விகிதத்தில் அளிக்க வேண்டும். கேரட் உருவாவதற்கு சாம்பல் சத்து மிக முக்கியம்.

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், உயிர் தண்ணீர் 3ஆம் நாளும் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது மகசூலை 30% வரை அதிகரிக்கும்.

விதைத்த 20-25 நாட்களில் முதல் களையும், 45 நாட்களில் இரண்டாவது களையும் எடுக்க வேண்டும். செடிகள் அடர்த்தியாக இருந்தால், 10 செ.மீ இடைவெளி இருக்குமாறு தேவையற்ற செடிகளைப் பிடுங்கி (பயிர் கலைப்பு) விட வேண்டும். அப்போதுதான் கிழங்கு நன்றாகப் பருக்கும்.

ரகங்களைப் பொறுத்து 100 முதல் 130 நாட்களில் கேரட் அறுவடைக்கு வரும். அறுவடைக்கு முன் நிலத்திற்கு லேசான நீர் பாய்ச்சினால் கிழங்குகளைச் சேதமின்றி எடுக்கலாம்.

முறையான பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி, கிழங்கு துளைப்பான் மற்றும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தினால் கேரட்டில் மிக உயர்ந்த தரமான விளைச்சலையும் நல்ல லாபத்தையும் பெற முடியும்.

Hindusthan Samachar / vidya.b