Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நவீன மிதிவண்டி, தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
நடப்பு 2026–27-ம் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 2,37,133 மாணவர்கள் மற்றும் 2,95,255 மாணவிகள் என மொத்தம் 5,32,388 பேருக்கு நவீன மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
மிதிவண்டிகளுடன் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட உள்ளது.
இதற்கான கொள்முதல் பணிகளுக்குத் தகுதியான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தமிழ்நாடு அரசு மின்னணு முறையில் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. தகுதியான நிறுவனங்கள் ஆகஸ்ட் 29, 2026 முதல் செப்டம்பர் 28, 2026 பிற்பகல் 3 மணி வரை தமிழ்நாடு அரசின் ஒப்பந்தப்புள்ளி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முன் கூட்டம் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 11 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தில் நடைபெற உள்ளது.
மேலும், ஒப்பந்தத்தைப் பெறும் நிறுவனங்கள் ஒரு மாணவருக்கான மாதிரி மிதிவண்டி மற்றும் ஒரு மாணவிக்கான மாதிரி மிதிவண்டி என இரண்டு மாதிரி மிதிவண்டிகளை செப்டம்பர் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 29, 2026 அன்று காலை 11.30 மணிக்கு இணையவழியில் திறக்கப்படும்.
கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாளில் இருந்து 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் முழுமையாக விநியோகிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ