Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு திரண்டு வருவதால், அங்கு கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளன.
இதனால் கியூ காம்ப்ளக்சுக்கு வெளியேயும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
நேர ஒதுக்கீட்டு டோக்கன் இல்லாத பக்தர்கள் சாமியை சர்வ தரிசனம் செய்ய சுமார் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பால், குடிநீர் மற்றும் அன்னபிரசாதம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக கிடைப்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, (வியாழக்கிழமை) மட்டும் 66 ஆயிரத்து 437 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அவர்களில் 26 ஆயிரத்து 771 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.
அன்று ஏழுமலையான் கோவில் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 45 லட்சம் வருமானம் கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, தரிசன வரிசைகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA