Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி முதல்வர் விஜய் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளர்கள் சிலர் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து அத்தொகுதியின் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரியே முதல்வர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல் வில்லிவாக்கம் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் மனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று இந்த வழக்குகள் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது,
தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக பெரம்பூரைச் சேர்ந்த வாக்காளர் தினேஷ் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
அதன்படி பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளின் வெற்றியை எதிர்த்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்த வழக்கு மற்றும் விஜய்யின் வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வாக்காளர் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b