5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் - முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச) திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக முதல்வர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இடைத்தேர்தல்
Cm


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச)

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக முதல்வர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்துடன், எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் எம்.எல்.ஏ. இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணமாகக் கொண்டு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என தடை கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ