Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் முன் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஏற்கனவே காவலில் எடுத்து விசாரணை நடத்திவிட்டனர் எனவே ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்தார்.
ஆனால் நீதிபதி, கார்த்திக்கின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கில் ஒருவர் தலைமறைவாக உள்ளார் என்பதற்காக கார்த்திக்கை நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு, செந்தில் பாலாஜியைவிட மனுதாரர் செல்வாக்கு மிகுந்தவர் என்றும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் வழக்கில் உள்ள சாட்சிகள் அச்சமடைந்து வாக்குமூலம் அளிக்கத் தயங்கக்கூடும் என்றும் வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / vidya.b