Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
“வார்த்தைகளில் சமூகநீதி பேசுவது எளிது; அதை அதிகாரத்தில் நடைமுறைப்படுத்துவதுதான் உண்மையான சமூகநீதி” என திமுகவை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில்,
“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை தாங்கள்தான் கொண்டு வந்ததாக பெருமை பேசும் திமுகவினரிடம், எத்தனை ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அர்ச்சகர்களாக நியமித்தீர்கள் என கேள்வி எழுப்பினால் பதில் இல்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை அமைச்சர்களாக நியமித்திருப்பதாக கூறும் திமுகவிடம், அது கொள்கையா அல்லது பச்சாதாபமா என கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலாக கூச்சல், கூப்பாடுதான் கிடைப்பதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேடைகளில் சமூகநீதி, சமத்துவம் குறித்து முழங்கிவிட்டு, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்க மறுப்பதாகவும் திமுகவை தவெக விமர்சித்துள்ளது.
அதேபோல், “நாங்கள் போட்ட பிச்சையில்தான் படித்தீர்கள்” என ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தியதாகவும் அந்தப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் தவெக, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 8 பேரை அமைச்சர்களாக நியமித்துள்ளதாகவும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வார்த்தைகளில் சமூகநீதி பேசுவது எளிது. அதை அதிகாரத்தில் நடைமுறைப்படுத்துவதுதான் உண்மையான சமூகநீதி. வாய்ச்சவடால் அல்ல; செயல்பாட்டில் கொள்கையை நிரூபிக்கிறது தமிழக வெற்றிக் கழக அரசு” என அந்த எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P