Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 28 ஆகஸ்ட் (ஹி.ச)
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவருக்கு, அவரது தாய்மாமன் மகனான முருகன் (27) என்பவருடன் கடந்த ஜூலை
5-ம் தேதி அதிகாலை திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
விநாயகர் கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றதாகவும், சிறுமியின் வயது 18-ஐ எட்டாத நிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சமூகநலத்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறுமியை திருமணம் செய்ததாக கூறப்படும் முருகன், அவரது பெற்றோர் மாதையன் (55), நாகமாள் (50) மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆறுமுகம் (52), ஆராயி (40) ஆகிய 5 பேர் மீது சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமிக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பாக திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் திருமணம் நடைபெற்ற சூழல், திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ