Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.6 கோடி மதிப்பிலான 1.6 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 24 வயது இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக பஹ்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வேலை பிடிக்காததால் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்த நிலையில், விமான டிக்கெட் வாங்குவதற்கு பணம் இல்லாமல் தவித்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், அந்த இளைஞரை அணுகி, சொந்த ஊர் திரும்புவதற்கான விமான டிக்கெட்டை தாங்கள் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். அதற்குப் பதிலாக பஹ்ரைனில் இருந்து தாய்லாந்து சென்று, அங்கிருந்து சென்னைக்கு வர வேண்டும் என்றும், தாய்லாந்து விமான நிலையத்தில் வழங்கப்படும் ஒரு பார்சலை சென்னைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பார்சலை சென்னையில் குறிப்பிட்ட நபர்களிடம் ஒப்படைத்தால் பணம் வழங்கப்படும் எனவும் ஆசை காட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு சம்மதித்த அந்த இளைஞர், பஹ்ரைனில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் காத்திருந்த இருவர், மருந்துப் பொருட்கள் அடங்கிய பார்சல் எனக்கூறி ஒரு பார்சலை அவரிடம் கொடுத்துள்ளனர்.
அந்த பார்சலை பெற்றுக்கொண்ட இளைஞர், பாங்காக்கில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமான டிக்கெட் மூலம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.
அப்போது விமான நிலையத்தில் பயணிகளை கண்காணித்துக் கொண்டிருந்த சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ஸ் பிரிவு அதிகாரிகளுக்கு, அந்த இளைஞரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனர். அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சலை பிரித்து சோதனை செய்ததில், அதற்குள் 1.6 கிலோ எடையிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1.6 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், திருச்சியைச் சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். சென்னையில் இந்தப் பார்சலைப் பெற்றுக்கொள்ள வந்த நபர் யார், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இளைஞருக்கு உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P