Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசு பொருட்காட்சி, பாளையங்கோட்டையில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மைதானத்தில் இந்த பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற உள்ள இந்த பொருட்காட்சியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்த பொருட்காட்சியின் முக்கிய நோக்கமே, தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். அதற்காக 26 முக்கிய அரசுத் துறைகள் சார்பில் தனித்தனியே பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, சுகாதாரம், கல்வி, மகளிர் மேம்பாடு, சமூக நலன் உள்ளிட்ட துறைகளின் சாதனைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து புகைப்படங்கள், மாதிரிகள் மற்றும் நேரடி விளக்கங்களுடன் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி முடிந்து அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்க ஏதுவாக இந்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெறும் கண்காட்சியாக மட்டுமின்றி, பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான ராட்சத ராட்டினங்கள், பெரியவர்களுக்கான விளையாட்டு அரங்குகள், பல்வேறு மாவட்டங்களின் சுவையை ஒரே இடத்தில் தரும் உணவுத் திருவிழா மற்றும் அரசு கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்குகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. தினமும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பொருட்காட்சியை கண்டு பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b