ஒசூர் அருகே பள்ளி பேருந்து - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து- 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி
கிருஷ்ணகிரி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பள்ளி பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒசூர் அடுத்த
Hosur


கிருஷ்ணகிரி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பள்ளி பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அடுத்த எலுவப்பள்ளி பகுதியில் 'ஓபன் ஆர்ம்ஸ் மெட்ரிகுலேஷன்' என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்குச் சொந்தமான பேருந்து, ஒசூர் - கக்கனூர் சாலையில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் ஒசூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

பேருந்து நல்லூர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக, நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த நல்லூர் காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஒசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஒசூர் மாநகராட்சி, மூக்கண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அன்பரசன் (50) மற்றும் சம்பத்குமார் (52) என்பதும், இவர்கள் இருவரும் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

விபத்தின்போது பள்ளிப் பேருந்தில் இருந்த மாணவ-மாணவிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN