Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
டெல்லி-என்சிஆர் பகுதியில் ஐஎஸ்ஐ ஆதரவுடன் இயங்கி வரும் வலையமைப்பு குறித்து சிறப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை தொடங்கியது.
தளவாட உதவிகளை வழங்கவும், இந்திய சிம் கார்டுகளை வாங்கவும் டெல்லியில் உள்ள உள்ளூர் நபர்களை இந்த வலையமைப்பு சேர்த்ததாக கூறப்படுகிறது.
இந்த சிம் கார்டுகள் துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு, அங்கு இந்திய எண்களைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்குகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் அதிகாரிகள் பின்னர் இந்த கணக்குகளைப் பயன்படுத்தி இந்திய வாட்ஸ்அப் குழுக்களில் ஊடுருவி முக்கிய தகவல்களை சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஸ்ஐ ஆதரவு உளவு வலையமைப்பை முறியடித்துள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவின் வடக்கு சரகம் இன்று அறிவித்துள்ளது.
இந்த விசாரணையின் முதல் கட்டமாக டெல்லி சராய் காலே கான் பகுதியைச் சேர்ந்த சாஹில் கைது செய்யப்பட்டார்.
அவரது கைப்பேசியை தடயவியல் பரிசோதனை செய்ததில் பாகிஸ்தான் முகவர்களுடனான குற்றத்தை உறுதிப்படுத்தும் தகவல் தொடர்புகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
சாஹிலிடம் நடைபெற்ற விசாரணையின் போது, 2024-ம் ஆண்டு தனது தோழியான சமீரா மூலம் இன்ஸ்டாகிராமில் பாகிஸ்தான் முகவர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த முகவர் இந்த தம்பதியை பாகிஸ்தான் உளவு அதிகாரி ஒருவருக்கு அறிமுகப்படுத்தியதாகவும், அவர் இவர்களை தயார்படுத்தி நிதி ஊக்கத்தொகை வழங்கி இந்த வலையமைப்புக்காக பணியாற்ற வைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் உளவு வலையமைப்புக்கு தளவாட ஆதரவு வழங்கவும், உளவு மற்றும் கள நடவடிக்கைகளுக்கு கூடுதல் நபர்களை சேர்க்கவும் சாஹில் மற்றும் சமீராவுக்கு பணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள ராணுவ பாசறை பகுதிகளை நோட்டமிடவும், ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் ராணுவ வீரர்கள் குறித்த தகவல்களைப் பெறவும் ஆட்களை சேர்க்கும் பணி சாஹிலுக்கு வழங்கப்பட்டதாக சிறப்புப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
சாஹிலிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அமைப்புகளுக்கு இந்திய சிம் கார்டுகளை வழங்கியதில் தொடர்புடையதாக அவரது மனைவி சமீராவும் கைது செய்யப்பட்டார்.
இருவரின் கைப்பேசிகளையும் தடயவியல் பரிசோதனை செய்ததில் பாகிஸ்தானில் உள்ள கையாளர்களுடனான குற்றத்தை உறுதிப்படுத்தும் வாட்ஸ்அப் உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சதி மற்றும் குற்றத்தை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு கைப்பேசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் எட்டு இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பியதற்காக இந்த தம்பதிக்கு சுமார் 30,000 ரூபாய் வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வலையமைப்பின் செயல்பாட்டு முறை, கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் உள்ளூர் மேல்மட்ட ஆதரவாளர்கள் மற்றும் உறங்குநிலை பிரிவுகளுடனான தொடர்புகளும் அடங்கும்.
இந்த விசாரணை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட உளவு வலையமைப்பின் செயல்பாடு மற்றும் உள்ளூர் நபர்களுடனான அதன் கூட்டு குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b