பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் - ரகுராம் ராஜன்
புதுடெல்லி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்க மத்திய வங்கியின் செ
Raguram rajan


புதுடெல்லி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கியின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள ரகுராம் ராஜன், அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் உள்ள ஜாக்சன் ஹோலில் நடைபெறும் மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் உயரதிகாரிகளின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், “பெடரல் ரிசர்வ் ஏற்கனவே வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்க வேண்டும் அல்லது தற்போது உயர்த்த வேண்டும். தற்போதைய நிலையில் பெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகளைவிட நான் இன்னும் கடுமையான நிலைப்பாட்டையே கொண்டிருப்பேன்” என தெரிவித்தார்.

அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த நிலையில் காணப்படுவதால், வரும் டிசம்பர் மாதத்தில் பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதே நேரத்தில், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வருவாய் விகிதம் (Bond Yields) கணிசமாக உயர்ந்துள்ளதால், செப்டம்பர் மாதத்திலேயே வட்டி விகித உயர்வு அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பையும் முதலீட்டாளர்கள் கணக்கில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P