Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
டெல்லியில் வெங்காயம் மற்றும் சர்க்கரையின் இருப்பு மற்றும் விலை நிலவரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா இந்த வார தொடக்கத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
டெல்லியில் இந்த அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், விலை மேலும் உயர்ந்தால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிடம் (NAFED) இருந்து வெங்காயம் மற்றும் சர்க்கரையை கொள்முதல் செய்து நகரின் பல்வேறு இடங்களில் கிடைக்கச் செய்யப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பொருட்கள் கொள்முதல் விலையிலேயே விற்கப்படும் என்றும், போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை டெல்லி அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெங்காய இருப்பை கண்காணிக்கவும், சந்தையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், பதுக்கலை தடுக்கவும், விதிமீறல்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு வந்த 'கந்தா எக்ஸ்பிரஸ்' சரக்கு ரயில் இன்று டெல்லி ஆதர்ஷ் நகர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்துதலைநகரில் கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த புதன்கிழமை விவசாயிகள் நாசிக் மாவட்டம் லாசல்கான் ரயில் நிலையத்தில் 'கந்தா எக்ஸ்பிரஸ்' ரயிலை மறித்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த ரயில் டெல்லி வந்துள்ளது. தங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட தரமான வெங்காயத்திற்கு பதிலாக தரம் குறைந்த, அழுகிய வெங்காயம் ஏற்றப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
வெங்காய விலை உயர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.38 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 4.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b