Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.
ஐயப்பன்தாங்கல் பகுதியில் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு முத்துகிருஷ்ணனின் மனைவிக்கு எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் நேற்று இரவு மெரினா கடற்கரைக்கு வந்த முத்துகிருஷ்ணன், விவேகானந்தர் இல்லம் எதிரே மது அருந்திவிட்டு அங்கேயே படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த ஒருவர், முத்துகிருஷ்ணனின் பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூ.27 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனை கவனித்த முத்துகிருஷ்ணன், உடனடியாக அந்த நபரை பின்தொடர்ந்து ஓடியுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் அற்புதராஜ் மற்றும் காவலர் சங்கர் ஆகியோர், முத்துகிருஷ்ணன் ஒருவரை துரத்திச் செல்வதை கவனித்துள்ளனர்.
இதையடுத்து, இருவரும் விரைந்து சென்று திருட்டில் ஈடுபட்ட நபரை துரத்திப் பிடித்தனர்.
பின்னர் அவரை மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (23) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
முத்துகிருஷ்ணனிடம் இருந்து திருடப்பட்ட ரூ.27 ஆயிரத்தில், தற்போது ரூ.4 ஆயிரம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பணத்தை ஓடும் போது கீழே விழுந்துவிட்டதாக ஆறுமுகம் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்திடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ