Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மாமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.
திமுக மண்டலக் குழுத் தலைவர் வேலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விளக்கமளித்தார்.
அதன்படி, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.22.4 கோடியும், சாலை செப்பனிடும் பணிகளுக்கு ரூ.15 கோடியும், தூர்வாரும் இயந்திரங்கள் வாங்க ரூ.4 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வார்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 கோடியும், மோட்டார் இயந்திரங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.26 கோடியும், இதர பணிகளுக்கு ரூ.15 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்தார்.
மேலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் தலைமையில் நான்கு கூட்டங்கள், மேயர் மற்றும் துணை மேயர் முன்னிலையில் ஒரு கூட்டம், கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் மூன்று கூட்டங்கள் நடைபெற்றதாகவும் ஆணையர் குறிப்பிட்டார்.
இதற்கு குறுக்கிட்டு பேசிய துணை மேயர் மகேஷ்குமார், அரசு சார்பில் நடைபெறும் மழைக்கால முன்னெச்சரிக்கை கூட்டங்களுக்கு மேயர் மற்றும் துணை மேயருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினார்.
“எங்களுக்கு தான் மக்களின் பிரச்சினைகள் தெரியும். எங்களை அழைக்காமல் எப்படி கூட்டங்களை நடத்துகிறார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, அரசு சார்பில் நடைபெறும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கூட்டங்களுக்கு தங்களுக்கும் துணை மேயருக்கும் அழைப்பு விடுக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினார்.
அப்போது, “மக்கள் ஆட்சியா? ஆளுநர் ஆட்சியா?” என மாமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மேயர் பிரியா, மக்களாட்சி தான்,ஆனால் ஆளுநர் ஆட்சியாக நடைபெறுகிறது என தெரிவித்தார்.
இதனால் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam