மேட்டூர் அணையில் வர்ணம் பூசுதல், மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்
சேலம், 28 ஆகஸ்ட் (ஹி.ச.) மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லை. அதேபோன்று, ஆகஸ்ட் 1-ஆம் தேதி
Mettur Dam


சேலம், 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லை.

அதேபோன்று, ஆகஸ்ட் 1-ஆம் தேதி கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரும் திறக்கப்படவில்லை.

உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் பயிர்கள் நீரின்றி கருகும் நிலை உருவானது.

இதற்கிடையே, நெல் சாகுபடிக்கும் உதவும் வகையில், ரூ. 134 கோடி மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பை முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

இந்த நிலையில், கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது ஓகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.

இதன் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. விரைவில் 90 அடியை அணை எட்டவுள்ளது.

அதன் அடிப்படையில், வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார்.

2026-2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது.

கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை எற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மேட்டூர் அணையில் காவல்துறையினர், நீர்வளத் துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

தற்பொழுது, நீர் திறப்பு விழாவிற்காக நீர்வளத் துறை சார்பில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், அணையை சுற்றியுள்ள முட்பதர்கள் அகற்றப்பட்டு, நுழைவாயில் மற்றும் சுற்றுள்ள சுவர்களின் வர்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், அணைப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் இருப்பதால், அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN