அமைச்சர் மரிய வில்சன் சட்டத்திற்கு மேலானவர் இல்லை - உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்க
Madras High Court


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது எனக் கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்தின் அரசர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கூட நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.

மரிய வில்சன் மாநிலத்தின் நிதியமைச்சர்தான். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மரிய வில்சன், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது புதுச்சேரி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் மரிய வில்சன் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, அமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார். மேலும், எவ்வளவு காலத்திற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியும்.

அமைச்சர் மரிய வில்சன் சட்டத்திற்கு மேலானவர் இல்லை என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை.

எந்த தேதியில் அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும் என்று அமைச்சர் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார்.

Hindusthan Samachar / ANANDHAN