Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை, பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்றைய சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறுகையில்,
ஈரான் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சர்வதேசச் சந்தைக்கு ஏற்ப அதிகரித்துள்ளது.
சில பொருட்களின் தற்காற்று உற்பத்தி அளவு குறைவாக உள்ளதால் தற்காலிகமாக விலை உயர்ந்துள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 41 முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரங்களை அரசு நாள்தோறும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
சந்தை விலையை விடக் குறைவான விலையில் பொதுமக்களுக்குப் பொருட்கள் கிடைக்க, ரேஷன் கடைகள் மட்டுமின்றி பசுமை நுகர்வோர் அங்காடிகள் (Pasumai Angadi) மூலமாகவும் மலிவு விலையில் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சந்தையில் திடீரென அதிகரித்துள்ள வெங்காய விலையை அடுத்த 2 நாட்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வரச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விலைவாசி நிலவரம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டினால், அதை உடனடியாக நிலைப்படுத்த முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ரேஷன் கடைகளின் மூலமாகவும் பொருட்களை குறைந்த விலையில் விற்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b