Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஊடகவியலாளர் வினோத் சூர்யகுமார் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பழனி கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களை பரப்பியதாகக் கூறி, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வினோத் சூர்யகுமாரை கைது செய்தனர்.
இதையடுத்து, தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதாகவும், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்ரவர்த்தி, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு அவதூறு வழக்குதான் தொடர முடியும் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, வினோத் சூர்யகுமார் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேவேளையில், இனிவரும் காலங்களில் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிடுவதற்கு முன்பு அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்த பின்னரே பதிவிட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam