Enter your Email Address to subscribe to our newsletters

காந்திநகர் , 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விண்ணப்பம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் அகமதாபாத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, குஜராத் துணை முதல்-மந்திரி ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விருப்ப விண்ணப்பம், 2029-ம் ஆண்டு காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமித்ஷா தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில்,
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு மையமாக மாற்றுவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் விண்ணப்பம் மற்றும் 2029, 2030-ம் ஆண்டுகளில் நடைபெற உள்ள சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளுக்கான பல்வேறு செயல்பாட்டு நடைமுறைகளை கண்காணிப்பதில் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதுடெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA