Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 2 பேரை தாக்கிக் கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் 48 மணி நேர பொது வேலைநிறுத்தப் போராட்டத்தால், ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களின் வருகை 0 சதவீதமாக பதிவாகியுள்ளது.
ஓவேலி பகுதியில் மனித உயிர்களை தொடர்ந்து பலிவாங்கி வரும் புலியை சுட்டுப்பிடிக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று முதல் 48 மணி நேர பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு, முக்கிய சாலைகள் மற்றும் வணிகப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதனிடையே, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று எந்த மாணவரும் பள்ளிக்கு வராததால், 0 சதவீத மாணவர் வருகை பதிவாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam