தொகுதி பெயருக்குப் பின் ‘ரிசர்வ்டு’ குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) தொகுதியின் பெயருக்குப் பின்னர் அடைப்புக்குறிக்குள் ‘ரிசர்வ்டு’ என குறிப்பிடும் நடைமுறையை தவிர்த்து, அனைத்து தொகுதிகளையும் போல தொகுதியின் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்ச
ரவிக்குமார் எம்.பி.


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

தொகுதியின் பெயருக்குப் பின்னர் அடைப்புக்குறிக்குள் ‘ரிசர்வ்டு’ என குறிப்பிடும் நடைமுறையை தவிர்த்து, அனைத்து தொகுதிகளையும் போல தொகுதியின் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இந்தப் பிரச்சினையை எழுப்பிய சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் நடைமுறை இருந்தபோது, தொகுதியின் பெயருக்குப் பின்னர் அடைப்புக்குறிக்குள் ‘Reserved’ என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அதனை நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எம்.பி.யாக இருந்தாலும், எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் ‘ரிசர்வ்டு தொகுதி’ என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே குறிப்பிடப்பட வேண்டியதாகும். மற்ற நேரங்களில் அதைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அல்லாத காலங்களில் ஒருவர் பொதுத்தொகுதியின் பிரதிநிதியா அல்லது தனித்தொகுதியின் பிரதிநிதியா என்பதை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும், எனவே அனைத்து தொகுதிகளையும் போல தொகுதியின் பெயரை மட்டும் குறிப்பிடுவதே சரியான நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பரிசீலித்து, தொகுதியின் பெயருக்குப் பின்னர் அடைப்புக்குறிக்குள் வேறு எந்தக் குறிப்பையும் இடம்பெறச் செய்யாமல், தொகுதியின் பெயரை மட்டும் குறிப்பிட உத்தரவிட வேண்டும் என்றும் ரவிக்குமார் எம்.பி. தனது எக்ஸ் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam