சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருக்கை விவகாரம் - மேயர்–துணை மேயர் கடும் வாக்குவாதம்
சேலம், 28 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாநகராட்சி 60 வார்டு உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மேயராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாரதா தேவி துணை மேயராகவும் பதவி வகித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே அவ்வப்போது கர
மாமன்ற கூட்டம்


சேலம், 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாநகராட்சி 60 வார்டு உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மேயராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாரதா தேவி துணை மேயராகவும் பதவி வகித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக அணியுடன் இணைந்ததாக கூறப்படும் நிலையில், மேயர்–துணை மேயர் இடையேயான மோதல் வெளிப்படையாகியுள்ளது.

இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயர் மற்றும் துணை மேயர் அவைக்கு வந்தபோது, மேயர் இருக்கைக்கு அருகில் துணை மேயருக்கான இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேயர், “துணை மேயர் இருக்கையை கீழே இறக்கினால்தான் நான் மேயர் இருக்கையில் அமர்வேன்” என கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து மேயர் மற்றும் துணை மேயர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில மாமன்ற உறுப்பினர்கள் மேயர் இருக்கையை மட்டும் உயரத்தில் வைத்துவிட்டு, ஆணையாளர் மற்றும் துணை மேயர் இருக்கைகளை கீழே அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேயர் தனது இருக்கையில் அமராமல் மாமன்ற உறுப்பினர்களுடன் கீழே அமர்ந்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், மேயருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் மாமன்ற கூட்டத்திற்குள் நுழைய முயன்றபோது அவர்களை வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாமன்றத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவிய நிலையில், மாநகராட்சி ஆணையாளர் லலிதா ஆதித்ய நீலம் அமைதியாக இருந்ததாகவும், எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam