Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நாளை சிறப்பு eKYC பதிவு மற்றும் சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்க்கும் பொருட்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த முகாம் நடைபெறும். மின் ஆளுமை முறையில் கைரேகை பதிவு மூலம் eKYC சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பயனாளிகளின் ஆதார் விவரங்களுடன் கைரேகை சரிபார்க்கப்பட்டு பதிவு உறுதி செய்யப்படும்.
தமிழகத்தில் இதுவரை 96.21 சதவீத eKYC சரிபார்ப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள பணிகளை 100 சதவீதம் முழுமையாக முடிக்கும் நோக்கில் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்த மாநிலம் தழுவிய சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
எனவே இதுவரை eKYC பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
eKYC சரிபார்ப்பு செய்யாதவர்களுக்கு எதிர்காலத்தில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b