Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 27) ஒரே நாளில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள், ரொக்கப் பணம் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில், பல்வேறு அலுவலங்களிலிருந்து ரூ. 28 லட்சத்து 24 ஆயிரத்து 945 கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் ஜி-பே மூலமாக ரூ. 89 லட்சத்து 89 ஆயிரத்து 663 மதிப்பிலான பரிவர்த்தனைகள் என மொத்தம் ஒரு கோடியே 18 லட்சத்து 14 ஆயிரத்து 608 ரூபாய் கணக்கில் காட்டப்படாதது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.`
அந்த வகையில் திருவண்ணாமலை ஆரணி நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் பிரிவில் முறைகேடுகள் நடப்பதாகவும், ஒப்பந்தப்புள்ளிகள் ஒதுக்கீட்டில் லஞ்சம் பெறப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நகராட்சி அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 1 லட்சத்து 24 ஆயிரம் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணம் எதற்காக வைக்கப்பட்டிருந்தது, யாரிடமிருந்து பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வரி வசூல் பிரிவு மற்றும் ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் மேலும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b