Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கையில் அமைச்சர் ஷாஜகான் பதிலுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர்,
ஒன்றிய அரசின் ஆட்சி தமிழ்நாட்டில் வந்திடக்கூடாது என்பதற்காக இந்த ஆட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளித்தது. அதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு மே 11ஆம் தேதி முதலமைச்சர் வருகை தந்தார்.
80 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த இயக்கத்தில் அலுவலகத்திற்கு இந்தியாவிலேயே வேறெந்த முதலமைச்சரும் வந்தது கிடையாது. ஆனால் முதல்முறையாக வருகை தந்தவர் முதலமைச்சர் விஜய்.
அனைத்து சமுதாய மக்களுக்கும் ஜாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் சிறுபான்மையினரின் அரசாக இருக்கும் என முஸ்லிம் லீக் அலுவலகத்தில் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த ஆட்சி சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தமிழக மக்கள் எவையெல்லாம் நடக்க வேண்டும் என்று ஏங்கினார்களோ அதையெல்லாம் நடத்திக் காட்டக்கூடிய முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார்.
நிச்சயமாக மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு சிறப்பான ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்திடும் என்பது உறுதி” என முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து, “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 400க்கும் அதிகமான வேலை பட்டியல்கள் உள்ளன. சிறுபான்மையினர் வாழக்கூடிய பகுதிகளில் 10 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட உள்ளது.
சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இலவசமாக படிக்கும் வகையில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக சிறுபான்மையினர் சமூகத்திற்கு 20க்கும் அதிகமான அறிவிப்புகளை ஒரே நிதிநிலை அறிக்கையில் அறிவித்த ஒரே அரசு தவெக அரசு தான்.
இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நன்றிக்கடன் பட்டிருக்கிறது. மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ள அறிவிப்புகள் கண்துடைப்புக்கான அறிவிப்புகள் அல்ல. அது சிறுபான்மையினர் சமூகத்தை கைதூக்கும் அறிவிப்புகள்” என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN